The Plato's cave

வாசிப்பும் அதன் நிமித்தங்களும்!


மென்மையாக ஒரு ந்வார் படம் – Experiment in Terror (1962) அனுபவம்

*SPOILER ALERT

Experiment in Terror Directed by Blake Edwards / 1962 / United States

”ந்வார்” (noir) படங்கள் என்றைக்கும் எனக்கு நெருக்கமானவை. விமர்சனம் நன்றாக இல்லையெனில் கூட ஒரு படம் “ந்வார்” வகைமை என்றால் பார்த்துவிடுவேன்.

இப்படத்தில் மிகப் பிடித்த ஒன்று–இதன் காரணமாகவே இப்படத்தை நினைவில் வைத்திருக்கப்போகிறேன்–இதில் வரும் ஒரு பாத்திரம் முதன்முறையாக தன்போக்கிலிருந்து விலகி வழக்கத்திற்கு மாறான முடிவை எடுப்பதும் அதனால் ஏற்படும் விளைவும்தான். காவல்துறைக்கு குற்றங்களைக் கண்டறிவதில் மறைமுகமாக உதவிபுரியும் ‘பாப்கார்ன்’ பாத்திரம் – இவர்கள் பணத்திற்காக நிழலுலக இரகசியங்களை காவலர்களுக்குச் சொல்பவர்கள். ஆனால், தகவல் எங்கிருந்து யார்மூலம் அவர்களுக்குக் கிடைக்கிறது, எந்த இடத்திலிருந்து கிடைக்கிறது என்பதை மட்டும் கவனமாகப் பாதுகாப்பார்கள். தகவல் கொடுப்பது மட்டுமே இவர்களது பணியின் அம்சம். இதில் அவர்களுக்கென சில கட்டுப்பாடுகள் இருக்கும். 

ஆனால், திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ‘பாப்கார்ன்’, காவல்துறைக்கு முதன்முறையாக தன் இயல்பிலிருந்து விலகி, தனக்குத் தகவல் கிடைத்த இடத்தையும் அங்கிருக்கும் நபரையும் அடையாளம்காட்ட காவல்துறை அதிகாரியோடு செல்வார். அங்கு நடக்கும் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோவார். கொலையாளிக்குத் தொடர்புள்ள (அதாவது கொலையாளி தன் ”இரைகளுடன்” பேசும் தொலைபேசி இருக்குமிடம்) இடத்தைக் கூற முடியாது என்று கூறியும் காவல்துறை அதிகாரியால் “உன்னால் உதவமுடியவில்லை எனில் இரண்டு அப்பாவிப் பெண்கள் உயிரிழக்க நீ காரணமாவாய்” என்று நைச்சியமாக மனம் மாற்றப்பட்டு உதவு முன்வந்து தன் உயிரை இழப்பார். அப்போதும் கையில் பாப்கார்ன் இருக்கும். பாப்கார்ன் இறந்ததும், மற்றொரு காவல் அதிகாரி ”இவர்களுடைய முடிவு இப்படித்தான் இருக்கும்” என்பதோடு சடலத்தின் முகமும் கையில் பிடித்துள்ள பாப்கார்ன் டப்பும் நெருக்கத்தில் காட்டப்படுகிறது.

“பாப்கார்ன்” பாத்திரம், காவல்துறை விசாரணையில் எவ்வித உணர்விரீதியான ஈடுபாடும் இல்லாமல் ‘தகவல் சொலல்” என்பதோடு கேளிக்கையைக் கண்டுகளிக்கும் பார்வையாளனாக மட்டுமே வருவார். முதன்முறையாக மனசாட்சிக்குப் பயந்து உதவ முன்வந்து உயிரை இழப்பது ”ந்வார்” படங்களுக்கு உரிய அழகியல் அம்சம். 

ஆனால் மேற்சொன்னதைத் தவிர இப்படம் மிகச்சிறப்பான அனுபவமாக அமையவில்லை. பிரச்சினை, பூனை-எலி விளையாட்டாகவும் இது எடுபடவில்லை என்பதுதான். முதன்மையான காரணம் தலைப்பில் இருக்கும் ஒருவித அதிர்ச்சியும் ‘சோதனையும்’ கதையிலோ கதைமாந்தர்களிலோ இல்லை.

இப்படத்தில் காவல்துறை நம்மைப் போலவே வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். குற்றவாளி யார் எனத் தெரிந்தும்; அவனது வரலாறு & புகைப்படம் கூட கிடைத்தும் அவனைக் கைது செய்ய இயலாதபடிக்கு இருக்கிறார்கள். அவ்வாறுதான் கதை எழுதப்பட்டுள்ளது. கொலையாளியின் பின்னணி ஆழமாக விவாதிக்கப்படவில்லை. சில படங்களில் ஏன்? எதற்கு? எவ்வாறு தொடர்படுகொலைகள் நடக்கின்றன எனக் கடைசியாக அக்கொலையாளி நீண்டதொரு வாக்குமூலத்தைக் கொடுப்பார். இதில் அப்படியெல்லாம் இல்லை. அதுவொரு பிழையில்லை எனினும் இரண்டு மணிநேரங்கள் செல்லும் இக்கதையில் நம்மால் எந்தக் கதாபாத்திரத்துடனும் ஒன்ற முடியாமல் போகிறது.

இன்றையகால சினிமாவை ஒப்பிடுகையில் ஒருவகையான அக்காலகட்டத்தின் மென்மையான சினிமாவக இதனைச் சொல்லலாம். அனைத்து பாத்திரங்களும் மென்மையாகவே இருக்கிறார்கள். கொலையாளி உட்பட. கொலையாளி “ரெட் லின்ச்” கொலை செய்வதும் நமக்குக் காட்டப்படுவதில்லை. கெல்லி ஷெர்வுட்டின் தங்கையைக் கடத்தும் காட்சியிலும் ரெட் லின்ச் அவ்வளவு மோசமானவனாகக் காட்டப்படவில்லை. இதனால் பார்வையாளராக நாம் முடிவெடுக்க முடியாதபநிலைக்குத் தள்ளப்படுகிறோம். 

மற்ற க்ரைம் படங்களைப் போல இதில், கொலையாளி/குற்றவாளி நேரடியாகக் குற்றத்தில் ஈடுபடாமல், அப்பாவிப் பெண்களை மிரட்டி அவர்கள் மனதில் பயத்தை விதைத்து அதன் மூலம் தான் நினைத்ததைச் சாதித்துக்கொள்கிறான். ஆனால் இப்படத்தில் — துவக்கக்காட்சில் கெல்லி ஷெர்வுட் இரவில் பணி முடிந்து காரோட்டி வரும்போது நகரம் இரவு நேர விளக்குகளால் மின்னுவது (பின்னணியில் இரம்மியமான ஜாஸ் இசை; காவலர்கள் தத்தமது கருவிகள் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் கொலையாளியின் நடவடிக்கைகளைக் கவனிப்பதும்; இறுதியாகக் கொலையாளியைப் பிடிக்க மைதானத்தில் வைக்கப்படும் “பொறி” & அதனைக் காட்சிப்படுத்திய விதமும் (set piece) போன்றவை அனைத்தும் கருப்பு வெள்ளையுல் ஒரு அலாதியான மனநிலையை உண்டாக்குவது இப்படத்தில் முக்கியமான அம்சங்களாகப்படுகின்றன.

வலிந்து நண்பர்களுக்குப் பரிந்துரைக்கவோ அல்லது குறிப்பிட்டுச் சொல்லும்படியோ இப்படத்தில் இப்போதைக்கு வேறெந்த அம்சமும் புலப்படவில்லை.

இவையனைத்தையும் கடந்து இப்படத்தைப் பார்க்கத்தூண்டிய மற்றுமொரு தூண்டல், அண்மையில் மறைந்த இயக்குநர் ’டேவிட் லின்ச்’ படைப்புகளில் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய இபப்டம் ஏற்படுத்தியுள்ளது என்பதைக் குறித்த கட்டுரை தான். https://collider.com/experiment-in-terror-david-lynch-twin-peaks/ 

.



Leave a comment

நதிக் கல்

இதற்குமேல் உருளமுடியாது
கல் நதியைவிட்டுக் கரையேறிற்று
இதற்குமேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று

வண்ணதாசன்