Munnariyippu (2014 | Malayalam | sun nxt | AR: 2.35:1 | Dolby Audio
[கதை குறித்து பேசுவதால் படத்தைப் பார்க்காதவர்கள் இப்பதிவைத் தவிர்ப்பது நலம். கட்டாயம் பார்த்துவிட்டு வந்து பதிவைப் படிக்கவும்]
எனக்கு மிகப்பிடித்த காஃப்கா கதாபாத்திரம் யார் தெரியுமா? ஜோசப் கா. எந்தக் குற்றச்செயலிலும் ஈடுபடாத அவன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவான். அவனொரு துரதிர்ஷ்டம் பிடித்த மனிதன்.
— பிரதாப் போத்தன் படத்தின் துவக்கத்தில் தனது விருந்தில் பங்கெடுத்த பத்திரிகையாளர்களிடம் சொல்வது.
இப்படத்தை முன்பே பார்த்திருந்தாலும் இரண்டாம் பார்வையில் இன்னமும் கூடுதலாக கவனத்தை ஈர்க்கிறது.

ராகவன், இரட்டைக்கொலை வழக்கில் சிறை சென்று, தண்டனைக்காலம் முடிந்தும் சொந்தவிருப்பில் சிறையிலேயே வாழும் மனிதர். விரைவில் ஓய்வுபெறப்போகும் சிறையின் உயரதிகாரி ராமமூர்த்திக்கு (நெடுமுடி வேணு) சுயசரிதையை எழுதித்தர—ghost writer— அவரது நண்பர் (பிரதாப் போத்தன்) மூலம் பரிந்துரைக்கப்பட்டு சிறைக்கு வரும் பத்திரிகையாளர் அஞ்சலி (தன் பெயர் நிலைக்குமளவிற்கு ஏதாவது செய்தாகவேண்டுமென்ற கனவோடு இருப்பவர்). இவ்வாறாக அமைக்கப்படும் கதையில் அஞ்சலியின் வருகை ராகவனின் வாழ்க்கையை அடியோடு மாற்றுகிறது. இதில் மாறுவது அஞ்சலியுடைய வாழ்வும் தான்.
ராகவன் (மம்முட்டி) தன்னுலகில் வாழும் மனிதர். அஞ்சலிதான் (அபர்ணா கோபிநாத்) ராகவனின் உலகில் தானாக விருப்பப்பட்டு நுழைகிறாள். முதன்முதலில் ராகவனின் மீது ஈர்ப்பு (காதல் என்ற பொருளில் அல்ல. ஒரு பத்திரிகையாளராக strange / weird subject மீது ஏற்படும் விருப்பாகக் கொள்ளலாம்) ஏற்படுகிறது. அஞ்சலியின் வீட்டில் சில்வியா பிளாத்தின் வாசகம் ஒன்று பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகிறது:
I desire things that will destroy me in the end.
இப்படத்தின் Kafkaesque labyrinthஇல் நுழைவது ராகவன் அல்ல, அஞ்சலி தான். தானாக விரும்பி வலையில் நுழையும் அவள் அதில் தன்னையே இழக்கிறாள். மீண்டு வர இயலாத அளவு அதில் பயணப்பட்டுவிடுகிறாள்.
ராகவன் சிறையிலிருந்து வெளியேறி அஞ்சலியால் ஒரு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருப்பார். அவருக்கு எழுதுவதற்குத் தோதான சூழலை உருவாக்கித்தர அஞ்சலி செய்யும் ஏற்பாடு இது. ஆனால் ராகவனால் எழுத முடியாது. அஞ்சலிக்கோ அவள் உறுதிகொடுத்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்ட தனியார் பதிப்பக நிறுவனம் அழுத்தம் கொடுக்கத்துவங்கும். இப்படியிருக்க ராகவன் தனது ‘விநோதங்களால்’ தனக்கென ஒரு கவனிப்பையும் ஒரு ரசிகர் கூட்டத்தையும் பொதுவில் எற்படுத்தியிருப்பார். ஒரு சமயத்தில் அஞ்சலி கொடுக்கும் அழுத்தமும் அவர் தங்கியிருக்கும் அறையும் தரும் தடுப்பை விலக்கி சுதந்திரமாக தன்போக்கில் வெளியே வருவார். அப்போது அவரைப் பார்த்து அடையாளம் காணும் ஒருவர், அவரை அருகிலுள்ள மதுபான விடுதிக்கு அழைத்துச்சென்று தன் நண்பர்களுக்கு அறிமுகம் செய்விப்பார். அச்சந்திப்பில் ‘சிறையிலிருந்து வெளியே வந்தாயிற்று. இப்போது சுதந்திரமாக உணர்கிறீர்களா?’ என்றொரு வினா எழுப்பப்படும். அதற்கு ராகவன் அளிக்கும் பதில் படத்தின் முக்கியமான, ராகவன் முதன்முதலாக புதிதாக நமக்கு வெளிப்படும் தருணங்களில் ஒன்று.
ராகவனுக்கு அவரைப் பொறுத்தமட்டில் எது சுதந்திரம் என்பதில் நன்கு தெளிவிருக்கிறது.
“பயத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் வாழ்வைப் போல அலுப்பானது வேறொன்றில்லை. அதுவே நம் சுதந்திரத்தை அழிக்கும்…”,
“இங்கு முக்கியமானது ‘சுதந்திரம்’ என்பதை நாம் எவ்வாறு பொருள் கொள்கிறோம் என்பதுதான். நீங்கள் மனதளவில் ’சுதந்திரம்’ எனக்கருதுவது எனக்கு ‘சுதந்திரமாக’ இல்லாமலிருக்கலாம். நம் வழியில் வந்து நமக்கு இடையூறு செய்விக்கும் சங்கதிகளை காட்டாயம் பிடுங்கியெறிய வேண்டும். அதுதான் சுதந்திரம்”.
அவரது இந்தச் சொற்கள் நமக்கு அதிர்ச்சியை அளித்து, சூழலில் துணுக்குறலை ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில் அவரது சித்தாந்தத்தை முதன் முதலாக பார்வையாளனுக்குக் கடத்துகிறது.
இறுதிக்கணங்களில்: அஞ்சலிக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமைவதற்கான சூழல் தெரிகிறது. அவள் ’ராகவன் அத்தியாயத்தை’ மறந்து, தன் வாழ்வை வாழத் தீர்மானிக்கிறாள். இறுதியாக ராகவனைத் தங்கவைத்துள்ள இடத்திற்கு வருகிறாள். அவரிடம் ’இனி எழுதவேண்டாம். உங்களுக்கு எங்கு போகவேண்டுமோ கூறுங்கள். அங்கே கொண்டுசென்று விட்டுவிடுகிறேன்’ என்பாள். அப்போதே, அவர் அவரது வாழ்வு குறித்து தான் இதுகாறும் கேட்டுவந்த வாழ்க்கைக்குறிப்பை எழுதியிருப்பதை அறிகிறாள். அதை வாசிக்கிறாள். ராகவன் என்ன எழுதியிருப்பார்? அவருக்கு அப்போது அஞ்சலியிடம் இருக்கும் எதிர்பார்ப்பு என்ன? என்பதை பார்வையாளர்களின் மனம் இப்போது ஊகித்திருக்கும். அதைத் தனியாக விளக்காமல் விட்டது படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று. அஞ்சலிக்குத்தான் இது தாமதமாகிவிட்டது. இறுதியில் மீண்டும் சுதந்திர நிலைக்கு ராகவன் செல்வதோடு படம் முடிகிறது. அவரிடம் இப்போது வேறொருவர் “நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?” எனக்கேட்டாள் அவரது பதில் என்னவாக இருக்கும் என்பதை நான் குறிப்பிடவேண்டியதில்லை.
படத்தின் முதற்காட்சியிலேயே அஞ்சலியின் தடுமாற்றம்—ஒரு காரியத்தைச் செய்ய களமிறங்குகையில் அதுகுறித்த ஆழ்ந்த கவனமில்லாமல் இருப்பது—நமக்குப் படத்திற்குச் சம்பந்தமில்லாததைப் போன்ற காட்சி மூலமாகக் காட்டப்படுகிறது.
கவனமாக எழுதப்பட்டு தேர்ந்த நடிகர்களால் நடிக்கப்பட்ட, சுதந்திரம் மற்றும் அது குறித்த பார்வையைப் பற்றிய அல்லது தன்னழிப்பு (self destruction) குறித்த சிறந்த Kafkaesque படமாகக் கருதமுடிகிறது.
படத்தின் குறைகளிலொன்று நாடகப்பாணியிலான ஒளிப்பதிவு. சட்டகங்கள் நன்றாக இருந்தாலும் பல தருணங்களில் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதைப் போன்ற உணர்வு ஒருவித அந்நியத்தன்மையை அளிக்கிறது.
.

