“திபெத்தின் ஒவ்வொரு துகளிலும் மதம் நீக்கமற நிறைந்திருந்தது. மனிதனும் கடவுளும் பிரிக்க இயலாதவர்கள். தொன்மங்களும் செவிவழிக் கட்டுக்கதைகளும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கும். நவீன உலகத்தால் புரிந்துகொள்ள முடியாத எத்தனையோ விதமான வேதனைகளை இங்கிருக்கும் மனிதர்கள் சகித்துக்கொண்டிருக்கிறார்கள்”
“ஒரு புராதான நகரின் சிதைவுகளைப் போல் எழும்பி நின்றிருந்த அந்த மலைகளில் வாழ்வின் துடிப்பு எங்கேயாவது தட்டுப்படாதா என்று நான் வீணாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்”
இவ்விரண்டு குறிப்புகளும் இத்தொகுப்பிற்கு நல்ல அறிமுகமக அமைந்துள்ளன.
நாக்கை நீட்டு, துணுக்குறச் செய்யும் கதைகளடங்கிய சிறுகதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் eerie என்ற சொல் நினைவிற்கு வருகிறது. Atmospheric, eerie stories about Tibet culture that is unknown to the world. இத்தொகுப்பு இது தரும் அதிர்ச்சிக்காகப் பரவலாகப் பொதுவாசகர்களையும் சென்றடையக்கூடும். ஆனால் இது அதுமட்டுமா என்பதில் வைத்து நம் வாசிப்பைத் தொகுத்துக்கொள்ளலாம்.

[பின்வரும் பத்திகளை புத்தகத்தைப் படித்துவிட்டு படிப்பது வாசிப்பின்பத்திற்கு அனுகூலமாக அமையும்]
நீலவானும் அந்தப்பெண்ணும் என்ற கதையை இப்படித் தொகுக்கலாம்: ஒரு புகைப்படம், அதன் சட்டகத்தினுள் ஒரு பெண்ணும் நீலவானும் இடம்பிடித்துள்ளனர். இந்தப் புகைப்படத்தை எடுத்தவர், அந்தப் பெண் திபெத்திய பீடபூமியின் நீலவானம். இவைதான் இக்கதை. திபெத்தில் நிலவும் ‘விண்ணடக்கம்’ என்ற வழக்கத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்தி அது நிகழ்வதையும் நேரடியாகக் களத்திலிருந்து விளக்கும் இதில், கதைசொல்லி ஒரு புகைப்படக்காரன். அவனது நினைவுகூறலின் வழியே கதையாக உருமாறுகிறது. இறுதியாக ஒரு புகைப்படம் மிஞ்சுகிறது.
இக்கதையைப் படித்து முடித்ததுவுடன் The vulture and the little girl என்ற உலகப்புகழ்பெற்ற புகைப்படமும் அதனை எடுத்த கெவின் கார்டரும் நினைவுக்கு வந்தனர். கெவின் கார்டர் ‘கச்சிதமான’ புகைப்படம் அமைவதற்காகக் காத்திருந்து அப்படத்தை எடுத்திருப்பார். புகைப்பட நிபுணரின் பணி புகைப்படமெடுப்பதுதான் என்ற நோக்கத்தில் இப்படத்தை அணுகினால், அந்தத் தொழிலுக்கே உரிய விலகல் தன்மையுடன் கார்டர் அக்குழந்தையையும் அதை உண்ணக் காத்திருக்கும் கழுகையும் ஆவணப்படுத்தியதை உணர முடியும். ஆனால் இந்த ’விலகல் தன்மை’ அவரின் மனிதத்தையும் அறத்தையும் மழுங்கச்செய்துவிட்டது என்பது அவர்மேல் வைக்கப்பட்ட விமர்சனம். (Macleod’s 1994 article “Pulitzer Prize Photograph Brings Awareness-At-a Price”)
இக்கதையில், கதை சொல்லி ஒரு புகைப்படக்காரன், ஒரு எழுத்தாளன், ஒரு ஆவணப்படுத்துபவன் என்ற நிலையில் ‘விலகியிருந்து’ ஒரு சடங்கை விளக்குகிறார். அதற்காக அவர் செய்யும் சூழ்ச்சியும் பதிவாகியுள்ளது. விண்ணடக்கச் சடங்கைக் காணக் கிடைத்திருக்கும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த சீன இராணுவ வீரனின் நன்மதிப்பைப் பெற அளவுக்கதிகாமகப் பொய்களை அவிழ்த்துவிடுகிறார். அதுகுறித்த குற்றவுணர்ச்சி அவரிடம் இருப்பதில்லை.
எட்டு நச்சுப்பற்கள் கொண்ட கரப்பான் கதையில் 1959 திபெத்திய கலவரத்தில் தந்தையை இழக்கும் ஒரு குடும்பத்தின் தாயும், மகனும் “ஆனாலும் இந்த விசயத்தில் எங்களால் வேறெதுவும் செய்ய முடியவில்லை” என இணைந்து வாழத் துவங்குவதும் அவர்களுக்கு குழந்தை பிறப்பதையும் பின்னொரு நாளில் மிதமிஞ்சிய போதையில் அக்குழந்தையை தந்தையே வன்புணர்வு செய்வதும் இதனால் குற்றவுணர்ச்சி கொண்டு உயிர்துறக்கக் காத்திருக்கிறார் என்பதையும் கதைசொல்லியின் வாயிலாக அத்தந்தையே நமக்கு விளக்குகிறார்.
பொன்மகுடம் – “முன்பொரு காலத்தில் மிலேரிபா எனும் பௌத்தத் துறவியின் எலும்பின் மீது எழுப்பப்பட்ட ஒரு வெண்கல ஸ்தூபி இந்த மடாலயத்தின் மிக உயரமான பகுதியில் நின்றுகொண்டிருந்தது. ஆனால், இப்பொழுது அந்த ஸ்தூபிக்கு அடித்தளமாய் அமைந்திருந்த சாம்பல்நிறக் கற்பீடம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது” எனத் துவங்கி கதைசொல்லி வாயிலாக அதை நிர்மாணித்த சங்பூச்சா என்ற கலைஞரும் அவரது துணைவி மற்றும் சீடர் ஆகியோர் பங்கெடுக்கும் அதீத காமமும் காதலும் பீறிடும் கதையொன்று சொல்லப்படுகிறது. இதில் ஆசிரியர் கதையை முடித்தவிதம் குறித்து இன்னமும் யோசித்துக்கொண்டேயிருக்கிறேன்.
தீட்சையின் கடைநிலை – ’வாழும் புத்தர்’ கதை: தொகுப்பில் அதீத அங்கதத் தொனியும் அதேயளவில் நம்பிக்கை மற்றும் சடங்கின்பொருட்டு ஏற்படும் துன்பத்தையும் பதிவு செய்கிறது. இக்கதையில் அப்போதுதான் பருவமடையும் பெண் (சிறுமி) நெடுங்காலமாக மண்ணில் ஊன்றியிருக்கும் நம்பிக்கைக்குப் பலியாகிறாள். இச்சடங்கு ‘ஈருடல் இணைப்புச் சடங்கு’ என அறிமுகம் செய்யப்பட்டு அதற்கு புராணத்திலும் ஓவியங்களிலும் நியாயம் செய்யப்பட்டுமிருக்கிறது. சொன்னபடியே இக்கதையில் மதத்தின் குரூரமும் பிடிவாதமும் பதிவாகிறது.
“தியானப் பயிற்சி மூலமாக உங்களுக்கு ஞானம் கைகூடப் பெற்றது என்றால், உங்களுடைய குருத்தெலும்பு நிறமற்று ஊடுருவிப்பார்க்கும் தன்மையாக மாறும்” என அவளுக்குப் போதிக்கப்படுகிறது. இறுதியில் அதிகாரமளிப்புச் சடங்கிற்குப் பிறகு உறைநதியின் மீது மூன்று நாள் தவமிருந்து அவளுடைய ‘பௌத்த இயற்கையை மேலோங்கச் செய்யும்’ நிகழ்வின் இரண்டாம் நாளில் உயிரிழக்கிறாள். சிறுமியான அவள் பாலியல் வன்புணர்வால் சிதைக்கப்பட்டு உறைபனியில் தவம் செய்ய அனுப்பப்பட்டு “யோகத்திறமையும் பிரார்த்தனையும் உதவாமல் கைவிடப்பட்டு” இறக்கிறாள். இறுதியில் “அவளும் பனியைப் போலவே ஒளி ஊடுருவும் படிகம் போல மாறிவிட்டிருக்கிறாள்” — அவளுக்கு ஞானம் கைகூடிவிட்டதாகக் கொள்ளலாமல்லவா!! But at what cost??
அவளின் மறைவையடுத்து, மதத்தையும் நம்பிக்கையையும் நிலைநாட்டும் மனிதர்கள் அனைவருமே “பகட்டான வைபவ அங்கிகளை உடுத்திருந்தார்கள். அவர்கள் ஓட்டிவந்த குதிரைகள்கூட வண்ணப்பட்டால் போர்த்தப்பட்டிருந்தன. வாழும் புத்தர் உயிராக இருக்கிறாரா இல்லையா என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை” என்பதை ஆசிரியர் விவரிக்கிறார்.
இக்கதையின் முடிவில் (அவள் பருவமடைந்ததை) முன்பு பூடகமாக சொல்லப்பட்டதை நேரடியாக மீண்டும் விளக்குகிறார். இதைத் தவிர்த்திருக்கலாம். ஓரளவில் உபபிரதியாக நின்று வடிவரீதியில் தன்னளவில் சிறந்த கதையாக இக்கதை வந்திருக்கூடும்.
இத்தொகுப்பில் ’துரோல்முலா ஏரியின் புன்னகை’ என்ற கதை மட்டும் தனித்து மற்ற கதைகளின் மைய பேசுபொருள்களான உடல் மீதான வன்முறை, காதல், காமம், கலாச்சார வன்முறை என்பதைக் கடந்தநிலையில் அமைந்திருக்கிறது. மேய்ச்சல் நிலங்களைத் தேடிச்செல்லும் தன் நாடோடிக்குடும்பத்தைத் தேடும் கதைசொல்லியின் பார்வையில் நகரும் இக்கதை அடர்வான மௌனங்களையும் நிலக்காட்சிகளையும் பனிமூட்டத்தையும் கொண்டிருப்பதால் என்னைப் பெருமளவில் ஈர்த்த கதையாக இதைக் கூறுவேன்.
—
தொகுப்பின் அனைத்துக் கதைகளுமே வடிவ, மொழி, தொனிரீதியாக கச்சிதமும் கூர்மையும் கொண்ட கதைகள் என்பதில் வெற்றிபெருகின்றன. மேலும் தொகுப்பின் அட்டைப்படத்தின் “சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்” என்ற அதீத கவனமீர்க்கும் வரிகளும் பொதுவாகக் கிடைப்பதைவிட கூடுதலான கவனிப்பை இத்தொகுப்பிற்கு ஏற்படுத்தித் தந்திருக்கின்றன என்பதை அறியமுடிகிறது. என் வட்டத்தில் பெரும்பாலோனோர் இதை முன்னமே வாசித்திருக்கிறார்கள் அல்லது அறிந்திருக்கிறார்கள்.
இத்தொகுப்பின் கதைகளை மதிப்பிட ஆசிரியரின் வாழ்வு, கதை எழுதியபோது அவருக்கிருந்த மனநிலை ஆகியவற்றை நான் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால் இத்தொகுப்பு குறித்து அறுதியான முடிவுக்கு வரமுடியாதபடி சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தொகுக்க முயற்சிக்கிறேன்.
இதன் பேசுபொருளை எற்கனவே கூறிவிட்டதால் மற்றவற்றைப் பார்க்கலாம்: அனைத்தும் ஆண் மையக்கதைகளாக, கதை சொல்லி அல்லது கதை சொல்லிக்கு கதை சொல்லும் மனிதர்கள் என ஆண்களாகவும், பெண்கள் அனைத்துக் கதைகளிலும் மௌனமாக தங்களுக்கு நிகழும் அநீதியை எதிர்கொள்பவர்களாக வருகிறார்கள். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தனிமனிதராலோ, கலாச்சாரத்தின் பெயரால் மனிதக்கூட்டதாலோ நிகழ்த்தப்படுகிறது. அதன் அமைதியான இயல்புநிலையாக்கம் கடுமையான தாக்கங்களை ஏற்படித்துகிறது. மேலும், ஒவ்வொரு கதையின் துவக்கத்திலும் நிலக்காட்சியின் சூழல் விளக்கப்பட்டு கதை துவங்குகிறது. கதைத் தலைப்புகளும் கவனமீர்ப்பவை. மொழியாக்கத்தை பொருத்தவரையில் எந்த இடத்திலும் இடறலோ அந்நியத்தன்மையோ இல்லாத தெளிந்த முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஒப்பிடாமல் மேலதிகமாக இதில் சொல்ல ஏதுமில்லையென்பதால் ‘வாசிக்க நல்ல முறையில், தெளிவாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது’ என்பதை மட்டும் கூறிமுடிக்கலாம்.
—
“It sounded rich material, albeit of a rather sinister nature” – என கீழைத்தேய உலகை மேற்கிற்கு தன் எழுத்தில் உற்பத்தி செய்யும் வில்லியம் டேல்ரிம்பிள் தன்னுடையை Nine Lives புத்தகத்தின் அறிமுகத்தில் குறிப்பிட்டிருப்பார். இதையேதான் ஒருவகையில் மா ஜின் செய்திருக்கிறார் என்பதை மறுக்கமுடியவில்லை. மேற்கத்தியர்கள் கீழைமரபுகளை ‘rich subject’ ஆகப் பார்ப்பது வேறு. இங்கு ஒரு சீன எழுத்தாளர் திபெத்தை அப்படிப் பார்த்திருக்கிறார் என்பது ஒருவிதத்தில் ஆச்சரியமளிக்கவில்லை.
முதலாளித்துவம் உருவாக்கிய நவீன சிந்தனை முறை அல்லது நவீனத்துவம் (குறிப்பாக தங்களை ‘மையமாக’ உணர்ந்த ஐரோப்பியர்கள்) காட்டுமிராண்டிகளாகிய கீழைத்தேய மக்களை நவீனப்படுத்துகிறோம், நல்வழிப்படுத்துகிறோம் எனச் சொல்லிக்கொண்டு தங்கள் செயலுக்கு நியாயம் செய்துகொண்டு நூற்றாண்டுகளாய் மக்களைச் சுரண்டியதைப் போல, மா ஜின் திபெத்திய கலாச்சாரத் துணுக்குறுலை கச்சாப் பொருளாக்கி சுரண்டியிருக்கிறார் என்றொரு சிந்தனையும் வருகிறது. இந்தச் சுரண்டலையே பின்நவீனம் கேள்விகேட்கிறது.
’மூன்றாவது கண்’ என்ற தன்னுடைய கட்டுரைத் தொகுப்பில் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி சில கருத்துக்களை முன்வைக்கிறார். இதை ஒருமுறை தொலைபேசியிலும் (ஜான் பான்வில்லின் ’கடல்’ படித்துவிட்டு நிகழ்ந்த உரையாடல்) என்னிடம் குறிப்பிட்டுள்ளார். ஒரு வகையில் ஜி.குப்புசாமி அவர்களின் கருத்தோடு ஒப்பிடுகிறேன். அதை இங்கு மா ஜியான் திபெத்தை அணுகியவிதத்தோடு பொருத்துகையில் இந்நூலின்மேல் ஒரு விமர்சனமாக அமைகிறது.
ஹெர்மென் ஹெஸ்ஸே (சித்தார்த்தா), ராபர்ட்டோ கலாஸ்ஸோ (க), ஈ.எம்.ஃபாஸ்டர் (A Passage To India) ஆகியோரால், “இந்திய மனத்தை, இந்திய ஆன்மாவை உள்வாங்க இயலவில்லை. இந்திய இல்லத்தின் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டு, ஜன்னல் வழியே பார்த்த, கேட்ட விஷயங்களைப் பதிவு செய்திருப்பதாகவே இந்நாவல்களைப் படிக்கும் வாசகர் உணர்கிறார்” என்கிறார். மேலும் ஃபாஸ்டரின் நாவலைக் குறித்து “ஆங்கிலேயப் பாத்திரங்களின் வழியாக இந்தியாவை வேடிக்கை பார்த்த நாவல்” எனக் குறிப்பிடுகிறார். மேலும் “இந்தியாவை எப்படிக் காட்டினால் பிடிக்குமென்று தெரிந்து கெட்டிக்காரத்தனமாக எழுதப்பட்ட இந்நாவலை இந்தியாவை உண்மையாகச் சித்தரித்த படைப்பாகச் சொல்ல முடியாது” என முடிக்கிறார்.
அதே சமயம், குந்தர் கிராஸ் எழுதிய “The Flounder” – கிராஸுக்கு “வங்கக் கலாச்சாரம் வெறும் வியப்பை மட்டும் அளித்ததாக இருக்கவில்லை. இந்நாவலில் கல்கத்தா ஒரு அத்தியாயம் முழுக்க விவரியிருக்கிறது.” எனப் பாராட்டவும் செய்கிறார்.
இத்தொகுப்பைப் படித்தமுடித்தவுடன் இலக்கின்றி சிந்தித்ததில் தோன்றியவற்றைத் தொகுத்திருக்கிறேன். இந்நூல் குறித்து முதல் வாசிப்பின் தோன்றிய கருத்துக்கள் இவ்வளவே!
.

