“இரக்கப்பண்பைக் (Pathos) கொண்டு பார்வையாளர்களை நெகிழவைக்காமல் பருண்மையான (Something Concrete) ஒன்றைக் கொண்டே நெகிழ்த்த வேண்டும்”
அந்நியப்படுத்தல் / தூரப்படுத்தல் விளைவு (Distancing Effect — Bertold Brecht)
Resnais-இன் ‘Night and Fog’ என்ற அற்புதமான படம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
– ஒரு நேர்காணலில் ஆனியெஸ் வர்தா
நம்பி கிருஷ்ணனின் இலக்கியத் திரைப்படக் கட்டுரைகள் (நரி முள்ளெலி டூயட்) – யாவரும் வெளியீடு
[அண்மையில், கென் லோச் இயக்கத்தில் 1969ல் வெளியான திரைப்படமான ‘கெஸ்’ திரைப்படத்தைக் கண்டேன். மெட்ராஸ் ஃபிலிம் ஸ்க்ரீனிங் கிளப், சென்னை அசோக் நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் சற்றேறக்குறைய 20 பேர் கலந்துகொண்டார்கள்.]
[’வாழை’ திரையரங்கில் வெளியானபோது பார்த்தது]
Kes – கேஸ்பர் என்ற சிறுவனின் பதின்பருவம்—குடும்பம், சமூகம், கல்வி அமைப்பு (ஓரளவிற்கு) ஆகியவற்றால்—நொறுக்கப்படும் கதை. அவன் வலுக்கட்டாயமாக பதின்பருவத்திலிருந்து அதை முழுமையாக அனுபவிக்காமலேயே முதிர்பருவத்திற்கு இழுத்துவிடப்படும் கதை. ’சிறுவனாக இருந்தது போதும். இதோ அசலான சமூகம் வெளியே இருக்கிறது. அதை உணர்’ என மனிதர்கள் தோற்றுவித்து வளர்த்தெடுக்கும் அதிகார மையங்களின் செயற்பாடுகளால் a boy forcefully killed.
பள்ளியும் குடும்பமும் அவனை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சுரண்டுகின்றன. அச்சூழலில் kestrel என்றொரு பறவை அவனுக்குக் கிடைக்கிறது. அந்த மோசமான சூழலில் அதுவே தொடர்ந்து வாழ அவனுக்கொரு காரணத்தையும் கொடுக்கிறது. நாம் அப்பறவையில் காண்பது கெஸ்பரைத்தான்.
“Hawks can’t be tamed. They’re manned. It’s wild and it’s fierce and it’s not bothered about anybody”
இதன்பிறகு அப்பறவைக்கு பறக்கக் கற்றுக்கொடுப்பதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கிறான்.

பள்ளியில் பொதுக்கூடுகையின் போது ஒரு மாணவன் மத்தேயு 18:10-14ஐ வாசிக்கிறான். அதில் காணாமற்போன ஆடு பற்றிய உவமை வருகிறது. அதன் புதிய மொழிபெயர்ப்பு இணையத்திலிருந்து:
“ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப்பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்”.
இவ்வசனம் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் முன்னிலையில் பகட்டாக வாசிக்கப்படும் வழக்கத்தை, ’கல்வி அமைப்பு மந்தையிலிருந்து விலகும் ஆடுகளைத் தேடிப்பிடித்து பாதுகாப்பதாகக் கூறிக்கொள்கிறது’ எனக் கொண்டால், மந்தையைச் சமூகம் அல்லது பள்ளி எனவும் ஆடுகளை மாணவர்கள் எனவும் எளிதாக அடையாலம் காணலாம். இவ்வாறாகக் காணமற்போகும் ஆடுகளை அல்லது அவர்களின் பார்வையில் ‘ஒழுக்கக்கேடான’ ஆடுகளைக் கடுமையாகத் தண்டிக்கும் பள்ளி வளாகத்தில், இந்த வசனம் பொதுவில் அறிவிக்கப்படுவது எவ்வளவு முரணானது? இதோடு மட்டுமல்லாது கதையின் தலைமைப் பாத்திரமான, இவர்கள் பார்வையில் வித்தியாசமாகத் தெரியும் கேஸ்பர், சக மாணவர்களாலும் தன்முனைப்புள்ள சில ஆசிரியர்களாலும் தொடர்ந்து ஒடுக்கப்படுகிறான், கேலி செய்யப்படுகிறான்.
படத்தின் ஒரு காட்சியில் முதன்முறையாக கேஸ்பர் உடையும் தருணம் வருகிறது. இதுவரை யாரும் கேட்டிராத உளக்குமுறலை விரக்தியின் உச்சத்தின் தன்னிடம் வந்து தன்னைக் கவனித்துப் பேசும் ஆசிரியரிடம் கூறுகிறான்: ”And teachers, sir. They’re not bothered about us, sir”.
இந்த ஒரு ஆசிரியர் மட்டுமே அவனைக் ‘கவனிக்கிறார்’. அவனோடு உரையாடி அவனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார். ஒருவகையில் மந்தையிலிருந்து வெளியேறிய ஒரு ஆட்டினை அரவணைக்க முயலும் ஒரே மனிதர். கேஸ்பரின் சகோதரனோ, தாயோ மற்றவர்களோ இதை அவனுக்குத் தந்ததில்லை.
ஒரு தருணத்தில், அவன் அதுகாறும் இன்புற்றிருந்த அவனையொத்த நகலான பறவையும் அவன் வாழ்க்கைக்கு ஒளியூட்டிய துணையுமான ’கெஸ்’ கொல்லப்படுகையில், கெஸ்பரும் இறக்கிறான். இனி, அவன் தன் சகோதரனைப் போல சுரங்கங்களின் பிடியின் அடியில் அகப்பட்ட கசப்பான கடின உழைப்பு சுரங்கத்தொழிலாளியாக மாறுவானோ? ஆனால், எதிர்காலப் பணிக்கான நேர்காணலின் போது அதிகாரியிடம் அவன் கூறியது நம் மனதில் எதிரொலிக்கிறது. “I’m not going down t’pit… I wouldn’t be seen dead down t’pit”. எனவே உறுதியாகச் சொல்லலாம். இவன் அவ்வாறு எதிர்காலத்தில் இறக்கமாட்டான்.
கடுமையான சூழல்களில் வளரும் பதின்பருவத்தினர் எதிர்கொள்ளும் வாழ்வை அதன் சமூக எதார்த்தத்தோடு பதிவு செய்த The 400 Blows படத்தை நினைவுறுத்துகிறது இப்படம். இப்படங்களின் தாக்கத்தை மாரி செல்வராஜ் இயக்க்கிய ‘வாழை’ படத்திலும் காண முடிகிறது.
இப்போது ’வாழை’:
- Fandry படத்தில் ஒரு காட்சி: ஒட்டுமொத்த கிராமும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார்கள். தன் நண்பர்களும் தன் மனதிற்குகந்தவளும் அக்கொண்டாட்டத்தில் திளைத்திருப்பார்கள். ஆனால் இக்கொண்டாட்டங்களின் மையத்தில் ’ஜப்யா’ என்ற சிறுவன், அசையாது, எவ்வித உணர்வையும் வெளியே காட்டாது அக்கொண்டாட்டத்திற்கு உதவும் வகையில் தன் தலையில் விளக்கை ஏந்தி நின்றிருப்பான். படத்தில் நாம் கடந்துவரமுடியாத தருணங்களில் இதுவுமொன்று. (வாழை படத்தில் தூக்கமுடியா வாழைத்தார் சுமையுடன் தன் கனவுகளைக் கட்டுப்படுத்தி வலியைத் தாங்கி சிவனைந்தான் குறுகிய வரப்புகளில் செல்லும் காட்சி)
- The 400 Blows படத்தில் அந்தோனியோ டோய்னேல் எண்ணற்றப் போராட்டங்களைச் சந்தித்து, இச்சமூகத்தின் தவறான புரிதல் மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டுமென முயற்சிப்பான்.
’வாழை’ திரைப்படம், புனைவாக்கப்பட்ட அல்லது புனைவுகளுக்கேயுரிய முலாம்கள் பூசப்பட்ட மாரி செல்வராஜின் வாழ்க்கைப் படமாக காட்டப்படுகிறது.

சிவனைந்தான் – கணம்தோறும் வாழத்துடிக்கும் ஒரு சிறுவன். ஆனால், சூழல் காரணமாக வாழைத்தார் சுமக்கும் அவல நிலைக்கு ஆளாகிறான். இந்தக் கடினமான நிலையில், வறண்ட அவனது வாழ்வில் வீசும் ஒரே பசுங்காற்று (அவன் பார்வையில்) அவனுடைய ஆசிரியர் தான். இப்படம் அவன் ‘வாழ்க்கையை’ அதன் அசலான முகத்தோடு எதிர்கொள்வதைக் காட்டுகிறது.
இழப்புகளூடாக வாழ்வின் தரிசனத்தை அடைதல் அல்லது ஒரு சிறுவன் மரணித்து வாலிபன் பிறத்தல்:
- தன் மனதிற்குகந்த பசு மாட்டினை அவனுடைய தாய் விற்கையில் சிவனைந்தான் உடையும் காட்சி வருகிறது. இந்த இழப்பு சிவனைந்தானுக்கு ஒரு துணவனை இழப்பதைப் போலத்தான். இதனூடாக குடும்பத்தின் நிலையும் தங்கள் மாட்டினை விற்கவேண்டிய நிலையும் நிறுவப்படுகிறது.
- தனக்கு நெருக்கமான ஒரே நண்பனை இழப்பது,
- தன்னுடைய சகோதரியை இழப்பது (குடும்பத்தில் அவனைப் புரிந்துகொள்ளும் ஒரே உயிர்)
- அதோடு தன் தந்தைக்கு நிகராக அவன் பார்க்கும் கனியின் இழப்பு. கனியும் அதிகாரத்தை எதிர்த்து கேள்விகேட்பவன். படத்தின் ஒரு காட்சியில் தன் தந்தை நினைவாக அவன் பாதுகாத்து வரும் ‘அரிவாள் சுத்தியல்’ சின்னத்தை கனியிடம் கொடுப்பான். இது ’அதிகாரத்தைக் கேள்விகேட்பதையும் அவர்களுக்கு எதிரானப் போராட்டத்தையும் என் தந்தையைப் போலவே தொடர்’ எனக்கூறுவதாக அமைகிறது.
வாழைத்தார் சுமப்பதற்கு எதிராக சிவனைந்தானின் போராட்டமே அவனை உயிரோடு வைத்திருக்கிறது. இக்கதையோடு பெருமுனைப்பான முதலாளியம் ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சுரண்டுவதையும் எடுத்துரைக்கிறார் மாரி செல்வராஜ். படம் நெடுக தாராளமாக திரையை நிறைக்கும் ’பசுமை’, இளமை, வளமை, வாழ்க்கை ஆகியவற்றையும் – இந்த அழகின் பின்னேயுள்ள கோரத்தையும் ஒருங்கே பதிவு செய்கிறது.
கெஸ் படத்தினைப் போலல்லாமல், நம் இந்திய மையநீரோட்ட படங்களூக்கேயுரிய துருத்தும் இசை, ‘வாழை’ படத்தின் பலவீனங்களில் ஒன்று. பல தருணங்களில் அமைதியாக விடுவதே போதிய தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் அத்தகைய தருணங்களில் கூட பின்னணியிசை தானும் இணைந்து காட்சியை ’உயர்த்த’ முயல்வது நெருடலாக அமைந்துள்ளது. இது இயக்குநரின் தேர்வாக இருக்கும்பட்சத்திலும், அவர் இவ்வாறே தன் படைப்பை பார்வையாளர் பார்க்க விரும்புகிறார் எனும்போது சொல்வதற்கு ‘பிடிக்கிறது’, ‘பிடிக்கவில்லை’ என்பதைத் தாண்டி எதுவுமில்லை. சுட்டிக்காட்டாலோடு நம் பணி முடிகிறது. ஆனால் பாடல்களும், நம் கிராமிய இசையும் ஒப்பாரி உள்பட நன்றாக அமைந்துள்ளன.
படத்தின் முடிவில் வரும் ஒப்பாரிப்பாடலும் கேமராவும் இறந்தது சிவனைந்தானின் நட்பும் சுற்றமும் மட்டுமல்ல, அவனுடைய ‘பிள்ளைப்பிராயமும்’ தான் என்பதைக் கடத்துகின்றன.
—
’கெஸ்’ படத்தின் கலையமைதி (அமைதியாக இருப்பதல்ல) அதன் மிகப்பெரிய பலம். இயக்குநரின் தேர்வு, இரசனை, சினிமா குறித்த பார்வை காரணமாக அடிப்படையிலேயே இது அமையும். ‘வாழை’ கதையாகச் சொல்லிப்பார்த்தாலே நேரடியாகவே மேலதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இரு படங்களும் ஒருவகையில் ஒரே நிகழ்வைக் காட்டினாலும், கதையைச் சொன்னவிதத்தில் எனக்கு ‘கெஸ்’ ஒருபடி மேலாகவே தெரிகிறது. ‘வாழை’ படம், நம் இந்தியச் சூழலுக்கேயுரிய பலங்களும் பலவீனங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது.
மாரி செல்வராஜ் மற்ற இயக்குநர்களைப் போலல்லாமல் படத்தில் ‘உப / ஊடு பிரதிக்கு’ முக்கியத்துவம் கொடுக்கும் நபர். இதிலும் நமக்குப் புலப்படாத சமிக்ஞைகள் நிறைய இருக்கலாம். இது என் தனிப்பட்ட இரசனை சார்ந்த மதிப்பீடுதான்.
இந்த வாசிப்பின் துவக்கத்தில் குறிப்பிட்ட ஆனியெஸ் வர்தாவின் நேர்காணலில் இரக்கப்பண்பு X பொருண்மை என்ற கருதுகோள்கள் ஒரு ஒப்பீட்டிற்காகச் சேர்த்தது. மேற்குலகில் ஒரு கருதுகோள் உருவாவதற்கு அங்குள்ள பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல், உளவியல் காரணங்கள் பின்னணியாக அமையும். அதே கண்கொண்டு ‘வாழை’ படத்தை அணுகமுடியவில்லை/கூடாது என்பதே என் துணிபு. இங்கு ஒரே அடியாக ‘மெலோ டிராமா’ என்று முத்திரையாளர்கள் உரைப்பதும் ஏற்க முடியாதது. ஒப்பாரி என்ற வடிவத்தை நாம் இப்படி முத்திரை குத்த முடியுமா? அது இங்கு உருவாகிவந்த ஒன்று அதற்கு இங்குள்ள கருதுகோள்களைக்கொண்டே ஆராய வேண்டும்.
பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களை வழக்கமாக சினிமாவை அணுகும் காரணிகளைக் (இவை மேற்கின் கோட்பாடுகளைக் கொண்டோ அல்லது மணிரத்னம் போன்றோரின் ‘அழகியல்’ காரணிகள் கொண்டோ அனைத்துத் தரப்பின் குரல்களையும் அணுகுவது) அணுகமுடியாது என்பதை இதுகுறித்து சிந்திக்கையில் கண்டுகொண்டேன். இப்போது நம் வாசிப்பை அதை நோக்கித் திருப்புவதே சரியாக அமையும். ஒரு படத்தைப் பார்த்துவிட்டு அதைக் குறித்து சிந்துத்துக்கொண்டே இருப்பது அலாதியானது (Like I’m doing now. I’m just ‘Thinking loud through text’). இது நம் போதாமையையும் நம் விருப்பு வெறுப்புகளையும் நாம் தற்போதுள்ள இடத்தையும் சரியாகவே சுட்டிக்காட்டுகிறது.

