தொகுப்பின் இரு சிறுகதைகள் குறித்து..
இத்தொகுப்பை வாசித்துமுடித்து இரு மாதங்களுக்குப் பிறகு நினைவிலிருந்தும் குறிப்புகளிலிருந்தும் எழுதியது. கதை நிகழ்வுகளை நினைவுகூறுவதில் தவறிருக்கலாம். வாசித்து முடித்தவுடன் மேலுழுந்த உணர்ச்சியில் சிந்திப்பதை எழுதுவது மிகை பாராட்டிலோ, மிகை இடித்துரைத்தலிலோ சென்று சேரும் அபாயமிருப்பதால் இப்படிக் காலங்கடந்து எழுதப்பட்டுள்ளது. இதில் ‘பாலூட்டிகள்’ மற்றும் ‘பழைய குருடி’ கதைகளைக் குறித்த எனது வாசிப்பை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். மற்ற கதைகளைக் குறித்து வேறொரு தருணத்தில் எழுதவெண்டும்.
த. ராஜனின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘பழைய குருடி’ பல காரணங்களால் கவனிக்கத்தக்க படைப்பாகிறது. இதில் இரண்டு சிறுகதைகள் நீங்கலாக, மற்ற கதைகளின் முதுகெலும்பாக தலித் வாழ்வும், தலித் இருப்பைச் சுற்றி சமூக அமைப்புகள் உருவாக்கும் நிரந்தர அச்ச நிலையும் செயல்படுகின்றன. இந்த அச்சம் தனித்த ‘கதை’யாக வெளிப்படையாக நம்முன் விரியாமல், கதைகளின் அடியோட்டத்தில் ஒரு சூழல் உணர்வாகச் செயல்பட்டு, வாசகனுக்குத் தன்னை மெதுவாக உணர்த்திக்கொள்கிறது. இந்த மறைமுகமான செயல்பாடே இந்தத் தொகுப்பின் அழகியலை வலுவூட்டும் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.
கொஞ்சம் விரிவாக: அச்சம் என்பது தனிப்பட்ட நிகழ்வாகவோ, உச்சமாகத் தோன்றும் வன்முறைத் தருணங்களாகவோ மட்டுமே செயல்படுவதில்லை; அது ஒரு நிரந்தர சூழல் உணர்வாக கதையின் முழு அமைப்பையும் ஆட்கொள்கிறது. இந்த அச்சம் கதாபாத்திரங்களால் எப்போதும் சொல்லப்படுவதில்லை, விளக்கப்படுவதுமில்லை; ஆனால் அவர்களின் உடல் மொழி, மௌனம், தயக்கம், தேர்வுகள் (சின்னத்துரை தன்னை “செட்டியார்” எனக் கட்டமைப்பது) மற்றும் இடப்பெயர்வுகள் வழியாக வாசகனுக்குத் தன்னை உணர்த்திக்கொள்கிறது. இவ்வகை அச்சம் காரணமற்ற சந்தேகமாகவோ மனநிலைச் சிதைவாகவோ அல்ல; வரலாறாகவும் சமூகமாகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு உயிர்வாழ்வுத் தேவை சார்ந்த விழிப்புணர்வாக செயல்படுகிறது. அதனால் இத்தொகுப்பில் paranoia என்பது தனிநபர் மனநிலையைச் சுட்டிக்காட்டும் உளவியல் கருத்தாக இல்லாமல், அதிகாரம் தெளிவாகப் பதியப்பட்ட சமூக அமைப்புகள் உற்பத்தி செய்யும் ஒரு ontological நிலையாக வெளிப்படுகிறது. இந்த atmospheric fear-இன் முக்கியத்துவம், அது கதையின் மையச் சம்பவமாக மாறாமல், அடியோட்டத்தில் இருந்து கதையைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது; வாசகன் அதை உணர்கிறான், ஆனால் எளிதில் பெயரிட முடியாமல் தடுமாறுகிறான். இவ்வகை அழகியல் யுக்தி Dalit எழுத்தை sensational violence-இல் இருந்து விலக்கி, தினசரி வாழ்வில் ஊடுருவியுள்ள கட்டமைப்பு வன்முறையின் நுண்ணிய செயல்பாடுகளை வெளிச்சமிடுகிறது.

பாலூட்டிகள்: அடையாளம், இடம் மற்றும் கலாச்சார இழப்பு உருவாக்கும் வெறுமை கந்தையனை குகைக்குள் இட்டுச் செல்கிறது. கதையின் இறுதியில் அவர் வௌவாலைப் பலி கொடுக்கும் நிகழ்வு ஒரு சடங்காக மட்டும் நில்லாமல், அவருடைய வாழ்வின் முடிவை ஒத்த உள் சமிக்ஞையாக வாசிக்க முடிகிறது; அது தற்கொலையை நினைவூட்டும் உளவியல் முடிவுத்தருணமாகப் படுகிறது. நகர்மயமாக்கலும் அதனை முன்னெடுக்கும் முதலாளித்துவ ஆணவமும் தன்முனைப்பும் வெளித்தோற்றத்தில் வளர்ச்சியை உருவாக்கினாலும், அதன் பின்னணியில் கண்களுக்கு புலப்படாமல் அழியும் அடையாளங்களையும் வாழ்வுகளையும் இக்கதை சுட்டிக்காட்டுகிறது.
எங்கிருந்தோ இங்கு வந்து “பெரும் பொட்டல்காடாக ஒரு காலத்தில் கிடந்திருக்கும் இந்தத் தோப்பை எந்தக் கூட்டம் உயிர்ப்பித்திருக்கும்?” எனக் கந்தையன் யோசிப்பார்.
இன்று “50 ஐடி நிறுவனங்கள், 200 மருத்துவமனைகள், 100 கல்லூரிகள், 700 உணவகங்கள், 60 வங்கிகள், ஒரு கோல்ஃப் வில்லேஜ், வந்திருக்கும் OMR சாலையில் மேட்டுக்குப்பம் பாரதியார் தெருவில் குடியேறிய சின்னத்துரைக்கு”, கடந்த காலத்தின் துளியைப் புகட்டி அவனது மூதாதை கந்தையனின் வாழ்வும் அதையொட்டிய வலி மிகுந்த இடப்பெயர்வுகளும் வேறொரு பிடுங்கப்பட்ட கலாச்சாரமும், ஒரு வௌவால் துடிப்பின் மூலம் ஒரு வரலாற்றையேச் சொல்ல எத்தனிப்பதாக ஒரு வாசிப்பை உருவாக்கிக்கொள்ள முடியும்.
சின்னத்துரை, தனது மூதாதையர் வாழ்வின் சிதைந்த தடங்களோடு தொடர்புறும் தருணங்கள் வழியாக வரலாற்று நினைவு நிகழ்காலத்தில் மீள்கிறது. இவ்விணைப்பு நேரடி வரலாற்றுக் கூறலாக இல்லாமல், சிதறிய நினைவுகளாகவே கதையில் தோன்றுகிறது. இதன் மூலம் தனிநபர் வாழ்க்கை, சமூக இடப்பெயர்வு மற்றும் கலாச்சார இழப்பு ஆகியவை ஒரே அனுபவமாக மாறுகின்றன.
பழைய குருடி சிறுகதையில், “ஒடுங்கிக்கொள்வது” காலங்காலமாக ஒவ்வொரு சந்ததிக்கும் கடத்தப்படுகிறது. இதில் சின்னத்துரை முதன்முதலாகத் தான் ஒடுக்கப்படுவதை உணர்கிறான். அந்த consciousness. இதில் கந்தையனின் வாழ்வு பாலூட்டிகள் சிறுகதையில் நமக்குச் சொல்லப்பட்டுவிட்டது. சின்னத்துரையின் தந்தை பாக்கியநாதனின் பள்ளிக்கல்வி நிற்பது. ஆனால் சின்னத்துரை தான் பிழைத்திருக்கத் தான் ‘செட்டியார்’ எனக் கட்டமைக்கும் கதைகளும், “மரியாதையாக” வாழ அவன் சில வேலைகலைச் செய்வதும் வருகிறது. சின்னத்துரை சிறுவயதில் பார்த்த நாடகம் குறித்து ஆசிரிய எழுதிய இடம் நன்றாக அமைந்துள்ளது.
இக்கதையில் நாய், பூனை முறையே சாதியக்கட்டுப்பாட்டிற்கும் கோவிட் பெருந்தொற்றிற்கும்; எலி – தான் அதுகாறும் மறப்பதற்காகப் போராடிவரும் பழைய நினைவுகளைக் கொணர்ந்து வருவதும் உவமையாக செயல்படுவதுபோன்றொரு இடம் வருகிறது.
இவை வெறும் காட்சிகளாக இல்லாமல் மேலும் கதையோட்டத்தை freeze செய்யாமல், அதன் இயல்பிலேயே வருவதும், சுற்றத்தில் சின்னத்துரை தானும் ஒரு எலியாய், பூனையும் நாயும் துரத்த வதைபடுவது போன்ற ஒரு மயக்கத்தில் வேறொன்றாக உருவெடுத்துக்கொள்கிறது.
சின்னத்துரை மரியாதையாக வாழ்வதற்காகத் தன்னைச் சுற்றி கதைகளைக் கட்டமைத்துக்கொள்கிறான்; பாகுபாடுகளைத் தவிர்க்க முயல்கிறான். வெளியே சென்று வீடு திரும்பும் போது, ஜன்னல்கள் வழியாக அவனை உற்றுநோக்கும் கண்கள் அவனை கூனிக்குறுகச் செய்கின்றன. பெருந்தொற்றுக் காலத்தின் சமூக இடைவெளி, ‘பழைய குருடி’ கதவைத் தட்டுவது போல, அவன் மறக்க முயன்ற வாழ்வை மீண்டும் அவன் முன் கொண்டு வருகிறது. அந்த நினைவுகளைத் தாங்க முடியாமல், அங்கிருந்து விலகிச் செல்லவேண்டும் என்ற எண்ணம் அவனுள் உருவாகிறது.
பெருந்தொற்றுக் காலத்தில் கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி, தலித் வாழ்வின் தனிமைப்படுத்தப்பட்ட அனுபவத்திற்கான பொருத்தமான உருவகமாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கதை சிதறிய அனுபவத் துண்டுகளாகவே நமக்கு கிடைக்கிறது; அவை ஒன்றிணைந்து ஒருங்கிணைந்த முழு அனுபவத்தை உருவாக்குவதில்லை.
ஆனால் நம் வாசக மனம் அதை இட்டுநிரப்பிக்கொண்டுவிடுகிறது.
தொகுப்பின் மையத்திலிருந்து விலகி நிற்கும் கதைகளாக வின்செண்டின் அறை மற்றும் அரூபியைக் குறிப்பிடலாம். இக்கதைகள் மற்ற கதைகள் அளிக்கும் தாக்கத்தை உருவாக்குவதில்லை. அரூபியில் மொழிநடை நல்ல அனுபவத்தை அளித்தாலும், வின்செண்டின் அறையில் வின்செண்ட் பாத்திரம் ஒரு உயிர்ப்புள்ள மனிதனாக அல்லாமல் caricature-ஆக வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. கதையில் நிகழ்வுகள் அனைத்தும் “கதையாகவே” முன்னிறுத்தப்படுவதால் இச்சிறுகதை வாசகனுடன் உணர்வுரீதியான இணைப்பு உருவாகவில்லை. ஒருவேளை ‘நான் தான் வின்செண்ட்’ என்ற first person narration-ல் வந்திருப்பின் இன்னும் நெருக்காமாக உணர்ந்திருக்கலாம். இங்கு ஆச்ரியர், மற்றமையின் வாழ்வை வெளியிலிருந்து அணுகும் முயற்சியில் இதனை அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.
இருப்பினும் கவனிக்கத்தக்க ஒரு இழை கதையில் உள்ளது: காலனியிலிருந்து சென்ற நாய் மேல் தெருவிலுள்ள பங்களா வீட்டின் நாயுடன் கூடுவதும், பின்னர் அவ்வீட்டாரால் கொல்லப்படுவதும் வின்செண்டின் உடைவைத் தூண்டும் முக்கியச் சமிக்ஞையாகிறது. பொதுவாகத் திட்டமிடல் எல்லா கதைகளிலும் இருந்தாலும், அது வாசகனிடம் மறைந்தபடி அனுபவமாக மாற வேண்டும்; இக்கதையில் அந்தத் திட்டமிடல் வெளிப்படையாக உணரப்படுகிறது. அதனால் கதை செயற்கையாக (“contrived”) தோன்றுகிறது. இதுவே அதன் பலவீனம்; மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் இது தொகுப்பிலிருந்து தனியே நின்றுவிடுகிறது.

- மிகக் கூர்மையாகத் தான் சொல்லவேண்டியதைச் சொல்வதும், இலக்கணத் துல்லியத்தைக் காக்கும் நடைமுறையும் எழுத்திற்கு வலு கூட்டுகின்றன; இவ்வகை மொழிக் கட்டுப்பாடு தமிழில் இப்போது அரிதாகி வரும் ஒரு பண்பாகவும் தோன்றுகிறது. இருப்பினும் தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சிகளை நினைவூட்டும் வகையில் மீளமீளப் பயன்படுத்தப்படும் “ஆனது” வாசிப்பின் இயல்பைச் சற்றுக் குலைக்கிறது. “கட்டுப்படுத்தியதானது”, “தடையானது”, “வதந்தியானது” போன்ற பயன்பாடுகள் ஒரு மொழிநடைத் தெரிவாக இருந்தாலும், வாசகனுக்குச் சிறு இடர்ப்பாடை உண்டாக்குகின்றன என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது.
- சூழலை மாய யதார்த்தப்படுத்த சபிக்கப்பட்ட, துர்மணம், துர்குணம் என்றெல்லாம் வரும் பிரயோகங்கள் சிறுகதையின் கருவிற்கோ அல்லது வாழ்வுச்சூழலுக்கோ பொருத்தமில்லாமல் தனியே நிற்கின்றன. ஆனால் கந்தையனே மீண்டும் சின்னத்துரையாகப் பிறக்கிறார் என்பதைவிட வேறொன்றும் அதற்குத் தேவையில்லை.
- கதைகளின் பல்குரல் தன்மை ஒருவிதமான சிதறுண்ட பகுதிகளை ஒன்றிணைத்துபோன்றொரு தோற்றத்தை அளிக்கின்றன.
ஆனால், பெரும்பாலான குறைகளைக் கடந்து முதல் தொகுப்பாகவே பலவிதமான வாசிப்புகளைத் தூண்டும் முயற்சியுடன் த. ராஜன் வருகின்றார். ஒற்றை உருவகம் அல்லது எளிய சிறுகதை அமைப்பில் தங்காமல், பல குரல்கள் மற்றும் பல படிமங்களை இணைத்து, சில கதைகளில் நாவலுக்குரிய பரப்பை நோக்கி நகரும் ஆவலை வெளிப்படுத்துகிறார்; குறிப்பாக “அறிவுஜீவியின் பொய்” கதையின் விரிந்த களம் இதனை உணர்த்துகிறது. ஆனால் அதன் விரிவான களமே சோர்வையுமூட்டிவிடுகிறது. இன்னும் செல்லவேண்டிய தூரம் இருந்தாலும், சற்றுக் கூடுதலான உழைப்பும் கவனமும் கொண்டால் ஒருவேளை இதைக்காட்டிலும் நல்ல சிறுகதைகளை அவர் எழுதக்கூடும் என்று ஒரு வாசகராகக் கூறமுடியும்.
